இந்திய அரசிலும், அரசியலிலும் பல தமிழர்கள் உயர் பதவிகள் வகித்து தங்களது அறிவாற்றல், நிர்வாகத் திறமை ஆகியவற்றால் தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்தனர்.
இந்தியாவின் கடைசி கவர்னர்- ஜெனரலாக பதவி வகித்த இராஜாஜி, குடியரசுத் தலைவர்களாக ஆர். வெங்கட்ராமன், ஏ.பி.ஜே. அப்துல்கலாம் ஆகியோரும் மத்திய அமைச்சர்களாக ஆர்.கே. சண்முகம் செட்டியார், டி.டி.கிருஷ்ணமாச்சாரியார், சி. சுப்பிர மணியம் போன்றோரும் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக காமராசர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவராக முகமது இஸ்மாயில், அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சித் தலைவராக
உ. முத்துராமலிங்கத் தேவர், அகில இந்திய குடியரசுக் கட்சியின் தலைவராக என். சிவராஜ் போன்றோர் பதவி வகித்து அப்பதவிகளுக்கும் தமிழர்களுக்கும் பெருமை தேடித் தந்துள்ளனர்.
ஆனால், இந்தியாவின் மிகப் பெரிய ஊழல் எனக் கருதப்படும் அலைக்கற்றை ஊழலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் சிலர் முக்கிய பங்கு வகித்திருப்பது, என்றும் மாறாத தலைக்குனிவை தமிழர்களுக்கு ஏற்படுத்திவிட்டது.
தொலைத் தொடர்புத் துறை அமைச்சரான ஆ. இராசா அலை கற்றையை அளிப்பதில் ஏல முறையைப் பின்பற்றாமல் முதலில் வருபவர்களுக்கு முதலிடம் என்ற முறையை பின்பற்றி பல புதிய நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கினார். மிக மலிவான தொகைக்கு அலைக்கற்றையைப் பெற்ற இந்த நிறுவனங்கள் அடுத்த ஒரு சில மாதங் களுக்குள்ளாக அனுபவம் வாய்ந்த தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு அவற்றை பல நூறு மடங்கு அதிக விலையில் விற்று பல ஆயிரம் கோடி அளவுக்கு ஆதாயம் பெற்றன என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதைக் கூறிய வர் எந்த எதிர்க்கட்சியைச் சேர்ந்தவரும் அல்லர். இந்திய அரசின் மத்திய தலைமைக் கணக்குத் துறை ஆடிட்டர் ஜெனரலின் அறிக்கையில் அரசுக்கு வரவேண்டிய ஒரு இலட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுவிட்டதாக கூறப்பட்டது.
எதிர்க்கட்சிகள் இந்தப் பிரச்சி னையை நாடாளுமன்றத்தில் எழுப்பி யதையொட்டி பெரும் அமளி ஏற்பட்டது. இவ்வளவும் பகிரங்கமாக வெளியான பிறகும் அமைச்சர் இராசா தானாக முன் வந்து பதவி விலகவில்லை. விசாரணை முடியும்வரை பதவியிலிருந்து விலகி இருக்கும்படி அவருக்கு பிரதமர் மன்மோகன் சிங் ஆணையிடவில்லை. இந்தக் குற்றச்சாட்டு எழுந்தவுடன் பிரதமரே முன்வந்து நாடாளுமன்ற அனைத்துக் கட்சிக் குழுவை அமைத்து விசாரணைக்கு ஆணையிட்டிருப்பாரே யானால் உச்ச நீதிமன்றம் இப்பிரச்சினை யில் தலையிட்டு விசாரணையைத் தானே நேரடியாக மேற்கொள்ள நேரிட்டிருக்காது.
இராசா பதவியில் தொடர்வதை உச்சநீதிமன்றம் கண்டித்தப் பிறகே அவரை பதவி விலக பிரதமர் அனு மதித்தார் என்பது வெட்ககரமானது.
உச்சநீதிமன்றத்தின் தலையீட்டின் பேரில் மத்திய புலனாய்வுக் குழு தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி மற்றும் சில உயர் அதிகாரிகளை கைது செய்தது. வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவரும் போதே மற்றொரு மத்திய அமைச்சரும் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்ற செய்தி வெளியாகி நாட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
நிதியமைச்சகத்தின் துணைச் செயலாளராக உள்ள இராவ் என்பவர் பிரதமரின் அலுவலகத்திற்கு மார்ச் 25ஆம் தேதி அனுப்பிய இரகசிய குறிப்பு அவர் மட்டுமே தயாரித்தது அல்ல. மாறாக, தொலைத் தொடர்புத் துறை, சட்டத்துறை, நிதித்துறை ஆகியவற்றின் செயலாளர்களும், பிரதமர் அலுவலக முதன்மைச் செயலாளரும் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்திற்கு அமைச்சரவைச் செயலாளர் தலைமை வகித்திருக்கிறார். இராவ் தயாரித்த குறிப்பில் நிதித்துறை 12 அம்சங்களை குறிப்பிட்டது. அதற்கு மேல் 14 அம்சங்களை அமைச்சரவை செயலகம் சேர்த்தது என்றும் திட்டவட்டமான தகவல்கள் கூறுகின்றன.
அப்போது நிதித்துறை அமைச்சராக இருந்தவர் ப. சிதம்பரம் ஆவார். எனவே, அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் அனைத்தும், அவருக்குத் தெரியாமல் இருந்திருக்க நியாயமில்லை. இந்த மாபெரும் ஊழலை அமைச்சர் சிதம்பரம் நினைத்திருந்தால் அப்போதே தடுத்திருக்கலாம் என தனது குறிப்பில் இராவ் குறிப்பிட்டிருப்பது முக்கியமானது ஆகும். முளையிலேயே கிள்ளி எறித்திருக்கக் கூடிய இந்த ஊழல் முள்செடியை மரமாக வளர அனுமதித்தது ப. சிதம்பரமே என்பது தெளிவாகத் தெரிகிறது.
பதவியில் மிக இளையவரான இராசா மட்டுமே இந்த ஊழலை செய்திருக்க முடியாது என்ற குற்றச் சாட்டு தற்போது நிரூபணமாகியுள்ளது. எனவே ஆ. இராசா செய்ததாகக் கூறப்படும் குற்றங்கள் அனைத்திலும் ப. சிதம்பரத்திற்கும் பங்கு உண்டு எனக் கருதவேண்டியுள்ளது.
சிதம்பரம் நிரபராதியாக இருந் தால் இந்த ஊழலைத் தடுக்கும் அதிகாரம் தன்னிடமிருந்தும் அதை பயன்படுத்தாதது ஏன்? அவ்விதம் அவர் செயல்பட முடியாதவாறு தடுக்கப்பட்டி ருந்தால் அவரை முடக்கிய அதிகார சக்தி எது? இந்த கேள்விகளுக் குரிய விடையை நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டிய கடமை சிதம்பரத்துக்கு உண்டு.
அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர் பாக அமைச்சர்கள் ஆ. இராசாவும், ப. சிதம்பரமும் தன்னைச் சந்தித்து ஆலோசனை நடத்தியதாக 4-7-2008 அன்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். எனவே 2001ஆம் ஆண்டு விலையில்தான் அலைக்கற்றை விற் பனை நடக்கப்போகிறது என்பது பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் அப்போதைய நிதியமைச்சர் ப. சிதம்பரத்துக்கும் தெரிந்துதான் இருக்க வேண்டும். சிறந்த பொருளாதார நிபுணர்களான அவர்கள், இதனால் நாட்டிற்கு பேரிழப்பு ஏற்படும் என்பதையும் கணித்திருக்க வேண்டும். ஆனாலும் இந்த ஊழல் நடைபெறு வதை தடுக்க அவர்கள் எதுவுமே செய்ய வில்லை. அவ்வாறு செய்ய விடாமல் அவர்களை கட்டிப் போட்ட சக்தி எது?
நிதியமைச்சகத்தின் இந்தக் குறிப்பு வெளியான பிறகும் மத்திய புலனாய்வுத் துறை இதுவரை ப. சிதம் பரம், மன்மோகன் சிங் ஆகி யோரிடம் பெயரளவுக்குக் கூட விசாரணை நடத்தவில்லை. மத்திய புலனாய்வுத் துறையின், உயர் பொறுப்பில் உள்ள ஐ.பி.எஸ். அதிகாரிகள், உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருப் பதுதான் இதற்குக் காரணமாகும். உள் துறை அமைச்சராக இருக்கும் சிதம்பரத் தின் மீது அவர்கள் நடவடிக்கை எடுக்க முடியாமல் கைகளைப் பிசைந்து கொண்டிருக்கிறார்கள்.
நாட்டு மக்களை ஏமாற்றுவதற் காக மத்திய அரசும், காங்கிரஸ் மேலிடமும் நாடகம் ஒன்றை நடத்தினார்கள். நிதியமைச்சரான பிரணாப் முகர்ஜி, தனது துறையின் துணைச் செயலாளர் இராவ் அனுப்பிய குறிப்பு தனது கருத்தல்ல என்று செய்தியாளர்களிடம் அறிவித்தார். அருகே இருந்த ப. சிதம்பரம் பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டது எனக் கூறி மகிழ்ச்சி தெரிவித்தார். பிரணாப் முகர்ஜிக்கும் ப. சிதம்பரத்திற்கும் இடையே உள்ள பிரச்சினைப் போல இது திட்டமிட்டுச் சித்தரிக்கப்படுகிறது. அலைக்கற்றை ஊழல் குறித்து எல்லாம் தெரிந்திருந்தும் அதை தடுக்கும் அதிகாரம் தன்னிடம் இருந்தும் அதை ஏன் ப. சிதம்பரம் தடுக்கவில்லை என்பது தான் பிரச்சினையே தவிர இரு அமைச் சர்களுக்கு இடையிலான பிரச்சினை அல்ல இது.
இதற்கிடையில் சிறையில் உள்ள ஆ. இராசா பிரதமரையும், ப. சிதம்பரத் தையும் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றத்தின் முன் வைத்துள்ளார். பிரதமரையும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் இது அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இராசாவை பின்னிருந்து இயக்கிய சக்தி எது என்பது அம்பலமானால் என்ன செய்வது என அவர்கள் பதைபதைத்துப் போனார்கள்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களான ஆ. இராசா, ப. சிதம் பரம் ஆகியோர் நேர்மையற்ற வகையில் நடந்து கொண்ட விதம் இந்திய அரசி யலில் தமிழகத்திற்கு இருந்த பெரு மையை சீர்குலைத்துள்ளது. அலைக் கற்றை ஊழல் புகார் எழுந்தவுடன் பதவியை விட்டு விலகவும் விசார ணையை எதிர்கொள்ளவும் ஆ. இராசா வும் முன்வரவில்லை. ப. சிதம்பரமும் முன்வரவில்லை.போதாக்குறைக்கு தகவல் தொடர்புத் துறையின் அமைச்ச ராக இருந்தவரான தயாநிதிமாறன் பதவி வகித்தக் காலத்திலேயே அலைக்கற்றை ஊழல் தொடங்கிற்று என்ற குற்றச்சாட்டு எழுந்து அதன்பேரில் மத்திய புலனாய் வுத்துறை விசாரணையை முடுக்கி விட்டுள்ளது. ஆக, இந்தப் பெரும் ஊழ லில் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் அனைவருமே தமிழர்களாக இருப்பது தற்செயலாக நேர்ந்தது அல்ல. திட்ட மிட்டே இந்த ஊழலை இவர்கள் செய் துள்ளனர் என்பது வெளிப்படையானது.
மத்திய நிதியமைச்சர்களாக பிரதமர் நேருவின் கீழ் பதவி வகித்த ஆர். கே. சண்முகம் செட்டியார், டி. டி. கிருஷ்ணமாச்சாரியார் போன்றவர்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட போது பதவிகளை துச்சமாக மதித்து தூக்கியெ றிந்து விசாரணையை நெஞ்சுரத்துடன் நேர்கொண்டு தங்களின் தூய்மையை நிலைநிறுத்தினார்கள்.
சுதந்திர இந்தியாவின் முதலாவது நிதியமைச்சராக பதவி வகித்த ஆர்.கே. சண்முகம் அவர்கள் 1948 பிப்ரவரியில் வரி ஏய்ப்பு தொடர்பான சில வழக்கு களை திரும்பப் பெற ஆணை பிறப்பித் தார். இந்த வழக்குகள் நியாயமற்ற முறை யில் தொடுக்கப்பட்டுள்ளன என்று அவர் நினைத்ததால் இந்த முடிவை எடுத்தார். ஆனால் அதற்கு முன்னதாகவே வரி ஏய்ப்புகள் தொடர்பான விசாரணைக் கமிசன் ஒன்றை வரதாச்சாரி என்பவர் தலைமையில் இந்திய அரசு அமைத் திருந்தது. கமிசன் விசாரணையில் இருந்த சில வழக்குகளை திரும்பப் பெற நிதியமைச்சர் சண்முகம் உத்தரவிட்டதின் விளைவாக பிரச்சினை எழுந்தது. கமிசன் தலைவரான வரதாச்சாரியைச் சந்தித்து தனது நடவடிக்கை குறித்து சண்முகம் விளக்கினார். ஆனாலும் காங்கிரஸ் கட்சியில் உள்ள சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதை பெரும் பிரச்சினை யாக ஆக்கினார்கள். உடனடியாக ஆர்.கே. சண்முகம் தனது நிதியமைச்சர் பதவியில் இருந்து 1948ஆம் ஆண்டு ஆகஸ்டு 15ம் தேதியன்று விலகினார். பிரதமர் நேரு பதவி விலகலை ஏற்க தயங்கினார். மிகக் கடுமையான சூழ் நிலையில் சண்முகம் தன் பொறுப்பை திறம்பட நிர்வகித்ததாகவும் மிகுந்த வருத் தத்தோடு பதவி விலகலை ஏற்பதாகவும் அவருக்கு நேரு கடிதம் எழுதினார். அவரையடுத்து நிதியமைச்சராகப் பொறுப்பேற்ற ஜான் மத்தாய் இந்த வழக்குகள் சம்பந்தமான கோப்புகளை முழுவதையும் பார்வை யிட்டு சண்முகம் இது தொடர்பாக எந்தத் தவறும் இழைக் கவில்லை எனப் பகிரங்கமாகக் கூறினார்.
ஆர்.கே. சண்முகம் அவர்கள் நேர்மையாளராக இருந்த காரணத்தினால் தான் காந்தியடிகள், நேரு, வல்லபாய் படேல் போன்ற மிகப்பெரிய தலைவர் களின் மதிப்பிற்கு உரியவராக இறுதி வரை திகழ்ந்தார். அவர் பதவி விலகி யதைக் கண்டு இந்தத் தலைவர்கள் வருந்தினார்களே தவிர அவர் மீது குற்றம் காணவில்லை.
அதைப் போல நிதியமைச்சராக டி.டி.கே. இருந்த போது பிரதமர் நேருவின் மருமகனான பெரோஸ் காந்தி முந்திரா ஊழல் பிரச்சினையை நாடாளு மன்றத்தில் எழுப்பினார் நொடித்துப் போன நிதிநிலைமையில் இருந்த முந்தி ராவின் நிறுவனங்களை மீட்பதற்காக ஆயுள் காப்பீட்டுக் கழகம் 2 கோடியே 76 இலட்சம் ரூபாய்களை அந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறது. தனி ஒரு மனிதரை காப்பாற்றுவதற்காக இந்த வழியை ஆயுள் காப்பீட்டுக் கழகம் கடைப்பிடித்திருக்கிறது. இந்தப் பணப் பரிமாற்றம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அவர் வற்புறுத்தினார். ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் அன்றாட நிர்வாகத்தில் நிதியமைச்சருக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. ஆனால் நிதி யமைச்சராக இருந்த டி.டி.கே. ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் அதிகாரிகள் தவறு செய்திருந்தால் அது குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டும். என்பதை ஒப்புக்கொண்டார். அதற்கிணங்க 1958ஆம் ஆண்டு சன வரி 20ஆம் தேதி சக்ளா கமிசனை பிரத மர் நேரு அறிவித்தார். அமைக்கப்பட்டு 50 நாட்களில் அந்தக் கமிசன் தனது அறிக்கையை அரசிடம் அளித்தது. இந்த அறிக்கை அரசிடம் அளிக்கப் பட்ட உடனேயே நிதியமைச்சர் டி.டி.கே. பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
பிரதமர் நேருவிற்கு அவர் எழு திய பதவி விலகல் கடிதத்தில் நிதித்துறை செயலாளர் மேற்கொண்ட நடவடிக் கைக்கு அமைச்சர் என்ற முறையில் நான் தார்மீகப் பொறுப்பு ஏற்கிறேன் என்று கூறி தனது கண்ணியத்தையும், நேர்மையையும் நிலைநாட்டினார்.
ஆர்.கே. சண்முகம் அவர்களும் டி.டி.கே. அவர்களும் மத்திய நிதி யமைச்சர் பதவியை திறம்பட வகித்து தமிழ்நாட்டிற்குப் பெருமை தேடித் தந் தார்கள். ஆனால் சனநாயக நெறிமுறை களை நிலை நிறுத்தவும் வெளிப்படை யான, நேர்மையான, தூய்மையான நிர்வாகம் நடக்கவேண்டும் என்பதற்காக வும் தங்கள் பதவிகளைத் துறக்க முன்வந்ததின் மூலம் மக்களாட்சியின் மாண்பை பல படி உயர்த்தினார்கள்.
மேற்கண்ட இருவரையும் தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் பொறுப்பை வகித்த ப. சிதம்பரம் இந்தியாவின் மிகப் பெரிய ஊழல் தனது கண்ணெதிரே நடைபெறுவதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருந்ததோடு, அதைத் தடுக்க எதுவும் செய்யாமல் இருந்தது அவரின் மீதான அய்யத்தை அதிகப்படுத்தியுள்ளது. மேலும் அந்த ஊழலுக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என சாதிக்க முயல்வதும் அவருக்கு பிரதமர் நற்சான்றிதழ் வழங்கு வதும் ஜனநாயக ஆட்சி முறையை கேலிக் கூத்தாக்கிவிட்டது. நிர்வாகத்தில் நேர்மை என்பதையும் ஆழக் குழித் தோண்டி புதைத்து விட்டது.
ஆர். கே. சண்முகம், டி. டி. கே. ஆகியோர் தங்கள் பதவிகளை தூக்கி யெறிந்து நிலைநாட்டிய உன்னதமான மரபுகள் காற்றில் பறக்க விடப்பட்டுள் ளன. இதற்கு காரணமானவர்கள்
ஆ. இராசா, ப. சிதம்பரம் ஆகிய இரு தமிழர்கள் என்பதால் ஒட்டு மொத்த தமிழர்களும் தலை குனிந்து நிற்கிறார்கள்.
நன்றி : தினமணி
|