சனவரி 2005
ஈழத்தமிழருக்கு உதவுக
தமிழக முதல்வருக்கு பழ. நெடுமாறன் கடிதம்

மதிப்பிற்குரிய முதல்வர் அவர்களுக்கு,
வணக்கம். ஆழிப்போலையின் விளைவாகப் பேரழிவிற்கு உள்ளாகி இருக்கும் தமிழக மக்களின் துயரம் துடைக்கத் தாங்கள் மேற் கொண்டுள்ள முயற்சிகளுக்கு உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில் பாராட்டுதலையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்கள் தலைமையில் தமிழக அரசும் அனைத்துக் கட்சிகளும் மற்றும் தொண்டு நிறுவனங்களும் துயர் துடைக்கும் தொண்டில் இணைந்து பணியாற்றுவது இந்த சோதனையான காலகட்டத்தில் இன்றியமையாத ஒன்று என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இந்த முயற்சியில் உலகத் தமிழர் பேரமைப்பு தங்களுக்கு எல்லாவகையிலும் துணையாக நிற்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மற்றொரு முக்கிய பிரச்னையைத் தங்கள் கவனத் திற்குக் கொண்டு வர விரும்பு கிறேன். இலங்கையிலும் ஆழிப் பேரலைகளின் விளைவாகப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஈழத்தமிழர்கள் நடுவில் வரலாறு காணாத வகையில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. தமிழக மக்களோடு தொப்புள்கொடி உறவு பூண்ட அந்த மக்களுக்கு உதவ வேண்டிய கடமை நமக்கு உண்டு.
தமிழக அரசின் சார்பில் உணவுப் பொருட்கள் துணிகள், மருந்துகள், மருத்துவக் குழுவினர் ஆகியவற்றை உடனடியாக ஈழத்தமிழர் பகுதிக்கு அனுப்பி மனிதநேய உதவி புரியுமாறு தங்களை வேண்டிக்கொள்கிறேன்.
உலகத் தமிழர் பேரமைப்பின் சார்பில் திரட்டப்படும் நிதி, பொருட்கள் ஆகியவற்றில் ஒரு பகுதியை ஈழத்தமிழருக்குத் தங்கள் மூலம் அனுப்ப நாங்கள் அணியமாக உள்ளோம என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புள்ள
(பழ. நெடுமாறன்)
தலைவர், உலகத்தமிழர் பேரமைப்பு.

முந்தைய நிகழ்வுஅடுத்த நிகழ்வு